*நல்ல சன்மார்க்க அன்பரின் சிந்தனைக்குரிய பதிவு*
ஏன்❓எதற்கு❓எப்படி❓
தேகத்தாலும் திரவியத்தாலும் பலகால் பசிநீக்கலாகிய ஜீவகாருண்யத்தை செய்தாலும்
வாக்கினால் பலகால் பாராயணமும் முற்றோதலும் ஜபித்தலும் பாடுதலும் துதித்தலுமாக முயன்றாலும்
மனதினால் பலகால் தனித்திருந்து ஆண்டவரையே நினைந்து சத்விசாரம் செய்து கருதிக் கொண்டிருந்தாலும் .
சுத்த சன்மார்க்கத்தின் இலக்காகிய நரை திரை பிணி மூப்பு சாக்காடில்லாத நித்திய தேகத்தை இதுவரை பெருமானார் தவிர எவரும் அடையாதது ஏன் ❓❓❓❓❓❓❓❓
ஏன் எனில் :-
பொத்தல் வாளி கொண்டு ஒருவன் கேணியிலிருந்து நீர் எடுக்க முயற்சிப்பது போல் நமது முயற்சி உள்ளது.
எவ்வாறெனில் ஒருபுறம் பாவம் செய்துகொண்டே மறுபுறம் புண்ணியமும் செய்துகொண்டிருந்தால் எங்ஙனம் புண்ணியத்தின் பலன் கிட்டும் .
முதலில் வாளியின் பொத்தலை அடைக்க வேண்டும் பிறகே கேணியிலிரந்து நீர் எடுக்க முயற்சிக்க வேண்டும் அதுபோல முதலில் பாவம் செய்வதை நிறுத்த வேண்டும் பிறகே புண்ணியம் செய்ய துவங்க வேண்டும் .
செய்த பாவங்கள் குறித்து மனம் வருந்தியும் இனி அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்ற உறுதியும் பூண்டு பிறகே புண்ணியகாரியங்களை செய்ய துவங்க வேண்டும் .
சரி நாம் அப்படி என்னதான் பாவம் செய்துவிட்டோம் அப்படி என்னதான் பாவம் செய்து கொண்டுள்ளோம் என வினவலாம் .ஆம் தாங்கள் வினவியது சரியே .
பாவம் எது ❓
புண்ணியம் எது❓என்று விவரமாக நாம் அறிந்துகொள்ள வேண்டுமெனில் .
உரைநடைப்பகுதி பக்கம் 453-அருள்நெறியிலும் ,பக்கம் 572-சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் இவ்விரு பகுதியிலும் மிக தெளிவாக பாவங்களை குறித்து பெருமானார் கூறியுள்ளார்.
தேகத்தினால்
1.பிறர்மனைவியை தழுவுதல்.
2.புசிக்கத் தகாத வேதத்திற்கு விரோதமான ஆகாரங்களை புசித்தல்.(தாமச இரஜோ உணவுகளை உட்கொள்ளல் மது புலால் கஞ்சா புகை போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத்துதல் ,ஜீவஹிம்சையான பால் தேன் முதலிய உணவினை எடுத்தல் )
3.அந்நியர்களுக்கு இம்சை செய்தல்
4.தீங்கு செய்பவர்களை தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் .
ஜீவகாருண்யம் செய்யும் அன்பர்கள் கவனக்குறைவாக இருந்தால் பல உயிர்கள் பலியாகிறது விறகு பயன்படுத்தும் தர்மசாலைகளில் அடுப்பு பற்ற வைக்க துவங்கும் முன் அதில் நிறைய ஜீவராசிகள் இருக்கும் அப்படியே நெருப்பை மூட்டுவது .
விறகு வைத்து எரிக்கும் போது சில விரகில் எண்ணற்ற எறும்புகள் எரிந்து வெந்து போகிறது .
சமைக்கும் போது மிளகு சீரகம் மல்லி ரவை இவைகளை கவனிக்காமல் டப்பாவிலிருந்து நேரடியாக அடுப்பு பாத்திரத்தில் போடும் போது வண்டு புழு எறும்பு போன்ற சிற்றுயிர்கள் சாகடிக்கப்படுகின்றன .
பசுவின் பால் இக்காலகட்டத்தில் மிகவும் உச்சகட்டமான ஜீவஹிம்சைக்கு பிறகுதான் நமக்கு கிடைக்கிறது ஆனால் பெரும்பாலும் எல்லா சன்மார்க்கிகளும் பசுவின் பால் பால் சாரந்த பொருட்களை பிரதானமாக பயன்படுத்துகின்றனர் .
மிருத்தின் தோலாலான இசைக் கருவிகொண்டு திருவருட்பாவே பாடினாலும் அது பாவத்தின் பட்டியலையே சாரும். நாம் செய்யும் தொழில் உயிர்க்கொலை செய்வதற்கும் புலால் உண்ணுவதற்கும் உயிர்க்கொலை செய்து அந்த உயிரின் உடலாகிய தோல் எலும்பு நகம் முடி இவற்றை கொண்டு தயார் செய்யும் கம்பெனிகளில் நாம் பணிபுரிந்து பாவிகளுக்கு துணை போகிறோம் .
தேகசுத்தியாகிய வழலை நீக்கல் பின் தினசரி கரிசாலை எடுத்தல் வெந்நீர் மட்டுமே அருந்தல் போன்ற நித்ய கர்ம விதியை செய்யாமலிருந்தால் இதுவும் தேகத்தால் செய்யும் பாவமே .
இப்படி தேகத்தால் ஒரு புறம் பாவம் செய்துகொண்டு மறுபுறம் பசி நீக்கும் ஜீவகாருண்யம் எத்தனை காலம் செய்தாலும் எங்ஙனம் பலன் கிட்டும் .
*வாக்கினால் செய்யும்* *பாவம்*
1.பொய் சொல்லல்
2.கோட் சொல்லல்
3.புறங்கூறல்
4.வீணுக்கழுதல்
விண்ணப்பத்தில் கூறுவது .
பொய் சொல்லல் ,பயனில கூறல் முதலிய குற்றத்தினால் நா வானது தடிப்பேறி அசுத்தமடைகிறது என்கின்றார்.
இப்படி வாக்கிலே ஒரு அதிகாரத்தொனியுடன் பிறரை அழைத்தல் தடிப்பான வார்த்தைகளை பிரயோகப்படுத்தல் ,
பயனில கூறல் அதாவது யாருக்கும் பிரயோசனமில்லாத பொழுது போக்கிற்காக மணிகணக்கில் பேசுதல் அதாவது கடலை போடுதல் என்று கூட கூறலாம் .சதா பிறர் குற்றம் விசாரித்து ஜீவதோஷம் ஏற்றிக் கொள்ளுதல் .
முதலான பாவங்களை செய்துகொண்டே எத்தனை முறை எத்தனை காலம் பாராயணம் முற்றோதல் துதி பாடுதல் செய்தாலும் எங்ஙனம் பலன் கிட்டும்.
*மனதினால் செய்யும்* *பாவங்கள்*
1.பிறன் மனைவியின் தேகத்தை தழுவ நினைத்தல் .
அந்நியருடைய சொத்தை கிரகிக்க நினைத்தல்.
3.அந்நியருக்கு தீங்கு செய்ய நினைத்தல் .
4.தனக்கு முடியாத காரியம் அந்நியருக்கு முடிந்ததை நினைத்து பொறாமையடைதல்.
விண்ணப்பத்தில் காமம் ,வெகுளி முதலிய அவகுணங்கட்கெல்லாம் வைப்பிடமாகிய பராய்முருட்டன்ன கருங்கல் கரணம் என்கின்றார் அதாவது தயவில்லாத கடின சித்தமும் கல்நெஞ்சுமுடையவர் என்கின்றார்
மனதிலே இத்தகைய மாசு அழுக்கு குற்றங்களை ஒரு புறம் உள்ளவனாய் மறுபுறம் தெய்வத்தை நினைக்கின்றேன் விசாரம் செய்கின்றேன் எத்தனை காலம் முயன்றாலும் எங்ஙனம் பலன் கிட்டும்.
முதலில் பாவம் செய்வதை நிறுத்த வேண்டும் பின்புதான் புண்ணியம் செய்ய துவங்க வேண்டும் அப்போதுதான் பலன் கிட்டும் .இலலையெனில் உழைப்பனைத்தும் விழலுக்கிறைத்த நீராய் சென்று முடியும் .
தேகத்தால் ஒழுக்கமில்லாதவர்கள் ஜீவகாருண்யம் செய்தாலும் பலனில்லை
வாக்கினால் ஒழுக்கமில்லாதவர் பாராயணம், ஸ்தோத்திரம், முற்றோதல் ,ஜபம் ,துதி பாடினாலும் பலனில்லை.
மனதினால் பாவம் செய்பவர் சத்விசாரம் செய்தாலும் பலனில்லை இதுவே காரணம் ஆகும் .
ஆகையினால் மனம்,வாக்கு,காயம் மூன்றில் ஒன்றில் ஒழுக்கம் தவறினாலும் மூன்றுமே கெடும் .
மன ஒழுக்கம்
வாக்கு ஒழுக்கம்
காய ஒழுக்கம் என்கின்ற மூன்று புள்ளிகளையும் இணைத்தால் ஒரு நேர்க்கோடு வரும்.மூன்று புள்ளியில் ஒரு புள்ளி ஒரு மில்லி மீட்டர் நகர்ந்தால் கூட நேர்க்கோடுவராது முக்கோணம்தான் வரும் செக்கு மாடு போல் பிறப்பு அவஸ்தை இறப்பு என்று சுத்தி சுத்தி வர வேண்டியிருக்கும் . அந்த நேர்க்கோடே சாலை .இந்த சாலை வழியாகத்தான் சபைக்கு செல்ல வேண்டும் என்பது சன்மார்க்க மரபு .
**ஒழுக்கமே சாலை .*
*சாலையே சபைக்கு** *கூட்டிச் செல்லும் .*
ஆகையினால் ஒழுக்கமில்லாமல் செய்யும் ஜீவகாருண்யம் ,பாராயணம்,முற்றோதல்,ஜபம்,ஸ்தோத்திரம்,சத்விசாரம் எல்லாம் பலனில்லாத வீண் செயலாகிவிடும்.
சாலை என்பது வெறுமனே சோறு ஆக்கி போடும் சமயல் கூடமல்ல நமது மனம் வாக்கு காயம் மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் நிற்க பழகும் ஒரு பயிற்சி சாதனா கூடம் .
ஒழுக்கம் எனும் சாலைவழியே சபைக்கு செல்வோம் .
நன்றி திருச்சிற்றம்பலம் .
💥🙏💥🙏💥🙏💥🙏💥
...
No comments:
Post a Comment